ஐயிரண்டு திங்களிலே
ஞானத்தங்கமே
அன்னையவள் ஈன்றெடுத்தாள்
ஞானத்தங்கமே
மெய்யதனை வளர்த்தெடுக்க
ஞானத்தங்கமே
அய்யனுமே உதவிசெய்தான்
ஞானத்தங்கமே
அறிவுதன்னைதான்கொடுக்க
ஞானத்தங்கமே
ஆசானும் உடனிருந்தான்
ஞானத்தங்கமே
ஆதரவாய் தான் இருப்பான்
ஞானத்தங்கமே
ஆதிசிவன் துணையிருப்பான்
ஞானத்தங்கமே
கற்றகல்வி பயன்தருமா
ஞானத்தங்கமே
உற்றதுணையும் உடன்வருமா
ஞானத்தங்கமே
கற்றைவார் சடையன் அவனை
ஞானத்தங்கமே
பற்றிநிற்க பரம சுகமாம்
ஞானத்தங்கமே
சேர்த்து வைத்த செல்வம்தான்
ஞானத்தங்கமே
பார்த்திருக்க கரைந்துவிடும்
ஞானத்தங்கமே
ஆர்த்தப்பிறவி துயரறுப்பான்
ஞானத்தங்கமே
பாரினிலே துணையாவான்
ஞானத்தங்கமே
கோலமிக்க இந்த வாழ்வும்
ஞானத்தங்கமே
ஆலாலன் அளித்ததாகும்
ஞானத்தங்கமே
சீலத்தோடு வாழ்ந்திருந்தால்
ஞானத்தங்கமே
காலாந்தகன் காத்துநிற்பான்
ஞானத்தங்கமே
கவலைகொண்ட வாழ்க்கையும்
ஞானத்தங்கமே
நீர்த்திவலையாய் மறைந்திடும்
ஞானத்தங்கமே
நிலவணிந்தோன் திருப்பாதம்
ஞானத்தங்கமே
நிலையான வாழ்வளிக்கும்
ஞானத்தங்கமே